அஸ்வெசும மோசடி; நோர்வூட் பிரதேச செயலகத்தின் இரு பெண் உத்தியோகத்தர்கள் கைது!
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரு பெண் உத்தியோகத்தர்கள் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரு உத்தியோகத்தர்களும் 2025ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றதாக கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் பிரதேச செயலகத்தின் குறித்த இரு அதிகாரிகளுக்கு எதிராக கிடைத்த தொடர்ச்சியான முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இரு அதிகாரிகளும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றையவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
