இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை உயரலாம்!


எரிபொருளுக்கான மாதாந்திர விலைத் திருத்தத்தின் அடிப்படையில், இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு விலைத் திருத்தம் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையான போக்கில் காணப்படுவதால், ஆகஸ்ட் மாதத்திற்கான விலைத் திருத்தத்தில் குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பு ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில், இம்முறை மேற்கொள்ளப்படும் விலைத் திருத்தத்தில் நுகர்வோருக்கு பெரியளவில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்றார்.

ஜூலை மாதம் முழுவதும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில் இலங்கையில் எரிபொருள் விலையை கணிசமாகக் குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், ஆகஸ்ட் மாதத்திற்கான விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.