9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சக மாணவர்கள்!
இரத்தினபுரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அதே வகுப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரிடையே அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் குருவிட்ட பொலிஸாரால் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்களில் இரு மாணவர்களை 28 நாட்கள் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், ஏனைய மூன்று மாணவர்களை பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருவிட்ட பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து மாணவர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின் படி, கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் மாணவிக்கு எதிராக தகாத செயலில் ஈடுபட்டதாகவும், மற்ற மூவர் அதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
