சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் தொடர்பில் சர்வ மத ஒன்றியம் கவலை!
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கல்முனையைச் சேர்ந்த அனோஜன், சவூதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த நிலையில், அண்மையில் கதிர்காமத்தை நோக்கிச் சென்ற சுப்ரமணி எனும் நாயை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதப் பொருளானது.
அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இடம்பெற்ற கருத்து மோதல்களின் போது, முஸ்லிம் சமூகத்தை குறிவைக்கும் வகையிலான கருத்து பதிவொன்றை அனோஜன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பதிவு தொடர்பில் சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத் தொகை சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்க்கு சமமானதாகும்.
இந்நிலையில், வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள் மற்றும் மத உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு மதத்தையும், அதன் புனித ஆளுமைகளையும், மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும், அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம், சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத வெறுப்பை தூண்டும் கருத்துகள் மற்றும் செயல்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்குவதில்லை என தெரிவித்துள்ள ஒன்றியம், அனோஜன் தனது பதிவை குறுகிய நேரத்திலேயே நீக்கி, தனது தவறை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோரியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், அவரது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மனவேதனை மற்றும் எதிர்கால வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மனிதாபிமான அணுகுமுறை அவசியம் எனவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி, அனோஜனின் தண்டனைக் குறைப்பு அல்லது நிவாரணத்துக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள், பண்பாடுகள் மற்றும் மத உணர்வுகளுக்கு முழுமையான மதிப்பளித்து, சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் சர்வ மத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
