தந்தை விஜய் குறித்து மனம் திறந்த ஜேசன் சஞ்சய்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!


தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

இந்தப் பேட்டி, விஜய்யின் குடும்ப வாழ்க்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தவெக உறுப்பினர்கள் மட்டுமல்லாது விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஜேசன் சஞ்சய், யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தனது முதல் விருப்பத் தேர்வு தனது தந்தை விஜய்யாகவே இருப்பார் என தெரிவித்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி உடனான அந்த நேர்காணலில், “ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதமுடன் தமிழ்நாட்டின் எந்த ஹீரோவை நடிக்க வைக்கலாம்?” என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஜேசன் சஞ்சய், “என்னுடைய முதல் தேர்வு அப்பாதான். காம்பினேஷன் நன்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவயதில் தந்தையுடன் இணைந்து கிரிக்கெட் பார்த்த நினைவுகள், படப்பிடிப்பு தளங்களுக்குச் சென்ற அனுபவங்கள் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.

சினிமாத்துறையில் நுழைவது தொடர்பாக தனது பெற்றோரிடம் பேசியபோது, அவர்கள் முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக ஜேசன் சஞ்சய்க்கும் அவரது தந்தை விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த நேர்காணல் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக விஜய் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜேசன் சஞ்சயின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.