எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பதை தற்போது உறுதியாகக் கூற முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருளின் மாதாந்த விலை, சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெயின் மாதாந்த சராசரி விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், இம்மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களில் உலகச் சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள் நிலவி வருவதால், தற்போது நிச்சயமற்ற சூழல் காணப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் வழக்கமாக மாதாந்த சராசரி விலையையே அடிப்படையாகக் கொண்டு விலையை நிர்ணயிக்கிறோம். இந்த மாதம் நிறைவடைய இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. அந்தக் காலப்பகுதியில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருகிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும். எனவே, தற்போது விலை உயருமா அல்லது குறையுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது” என்றார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் தாக்கமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய்க்கு 100 டொலரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.