காவிரி விவகாரம்: விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு!
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு, மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, திரையரங்குகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த படத்தின் விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகள் கிழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவிரி விவகாரம் தொடர்பான எதிர்ப்பின் காரணமாக, கர்நாடகாவில் திரைப்படத்தின் திரையிடலை நிறுத்த வேண்டும் என கன்னட அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், கர்நாடகா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கர்நாடகாவில் படத்தின் வசூலிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
