உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, காவல்துறை விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் போலீஸார் இன்று காலை உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண், “உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. இது கைதுக்கு முந்தைய நடவடிக்கை மட்டுமே. தஞ்சாவூர் போலீஸாரின் விசாரணை முடிந்ததும் அவர் விடுவிக்கப்படுவார்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி இளந்திரையன், உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் காவல்துறை விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னணி
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழான பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து இன்று காலை தஞ்சாவூர் போலீஸார் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் அவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேவேளை, தவெகவினரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், காவல்துறை விசாரணைக்குப் பின்னர் உதயநிதி ஸ்டாலினை இன்று விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.jpg)