சீரற்ற வானிலை: பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை முன்னிட்டு, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இன்று (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
எதிர்வரும் நாட்களிலும் சீரற்ற வானிலை தொடரும் பட்சத்தில், பரீட்சைகளை எவ்வித தடையுமின்றி நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், ஆகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மழையால் பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணித்து, உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மையத்தின் செயல்பாட்டு அறையில் (Operations Room) விசேட பிரிவு ஒன்று நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அவசர நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக உதவிகளை வழங்குவதற்காக படகுகள் மற்றும் அனர்த்த மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
