உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம்: த.வெ.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!


காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

“தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்” எனத் தெரிவித்த அவர், த.வெ.க அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினை தஞ்சை காவல்துறையினர் இன்று (04.08.2026) கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கை த.வெ.க அரசின் பாசிசத் தன்மையையே காட்டுகிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, த.வெ.க அரசின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பாக தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், விசாரணைக்குப் பின்னர் விரைவில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், மாநில அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது.