நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!


இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடும் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

நிலவும் கடுமையான வரட்சி மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத் தலைவர் சி.ஏ. சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, அண்மைய நாட்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் மரக்கறிகளின் அளவு சுமார் 200,000 கிலோகிராம்களால் குறைந்துள்ளது. முன்னர் நாளொன்றுக்கு 600,000 கிலோகிராம் கிடைத்த நிலையில், தற்போது அது 400,000 கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாக சந்தையில் ஒரு கிலோ கறி மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையும், கரட் 230 முதல் 250 ரூபாய் வரையும், கத்தரிக்காய் 350 ரூபாய்க்கும், முருங்கை 150 முதல் 200 ரூபாய் வரையும், பூசணிக்காய் 115 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலவும் வரட்சி காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளதால், விவசாயிகள் மரக்கறி பயிரிடுவதில் தயக்கம் காட்டுவதாக மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்வதில் சிரமம் நிலவுகிறது. இதனால் மரக்கறி விலைகள் உடனடியாக மேலும் உயராத போதிலும், போதுமான கையிருப்புகளைப் பேண முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது கடுமையான மரக்கறி நெருக்கடியாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.