அஸ்வெசும பயனாளிகள் தெரிவுக்கு புதிய முறை: சமூக-பொருளாதார நிலைக்கு முன்னுரிமை!


அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, குடும்பங்களின் சமூக-பொருளாதார பாதிப்பு நிலையை அடிப்படையாகக் கொண்ட புதிய மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது.

புதிய தெரிவு முறைமையின் கீழ், குடும்பத்தின் வாழ்வாதார பாதுகாப்பு, உறுப்பினர்களின் எண்ணிக்கை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள், இருப்பிட வசதி, அடிப்படைச் சேவைகளுக்கான அணுகல் மற்றும் கடன்பாடு உள்ளிட்ட சமூக-பொருளாதார காரணிகள் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.

தற்போதைய தெரிவு முறையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், நடைமுறையில் உள்ள அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய முறைமையின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னோடித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.