முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப் பாதைகள்: இலங்கையில் புதிய முன்னோடி திட்டம்!
நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடி திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளாக பதிவாகி வருவதாகவும், ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை சுமார் 2,750 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2019 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,400 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் பின்னால் பயணித்தவர்களும் உயிரிழந்துள்ளதுடன், கடந்த ஆண்டுகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் மொத்தமாக சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், களுவாஞ்சிக்குடி பிரதான வீதியின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிள்களுக்காக மட்டும் ஒதுக்கப்படவுள்ளது. அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், வழக்கமான வீதி அடையாளங்களுக்கு பதிலாக வீதித் தடுப்புகள் அமைத்து, தனித்துவமான பாதை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
