வறட்சியான வானிலை நீடிப்பு; நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சியான வானிலை நீடித்து வருவதால், பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்கனவே கடுமையான நீர் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் பிரதான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது சுமார் 40 சதவீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும், எதிர்வரும் எல் நினோ காலநிலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகும் வீதம் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், மழை பெய்யும் வரை நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய நீராதாரங்களில் உள்ள நீரை வீணாக்காமல் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து எல் நினோ நிலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்தார்.
எல் நினோ என்பது மழை முற்றிலும் பெய்யாது என்பதைக் குறிக்காது. மாறாக, மழைப்பொழிவு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், வெப்பநிலை அதிகரிப்பால் ஆவியாதல் வீதம் உயர்வதால் நீர் முகாமைத்துவம் மிக முக்கியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பெரும்போகப் பயிர்ச்செய்கையை எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாசன அமைப்புகள் மற்றும் விவசாய மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிர்ச்செய்கையைத் தொடங்குவது குறிப்பிடத்தக்க அளவு நீரைச் சேமிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வறட்சியான வானிலையைச் சமாளிக்கும் வகையில் குடிநீர் மற்றும் மின்சாரப் பயன்பாட்டையும் சிக்கனமாக மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
