உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!


இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.

பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை பாடசாலை அதிபர்கள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ள வீட்டு முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

அனுமதி அட்டைகளில் தவறுகள் அல்லது திருத்தங்கள் இருப்பின், அவற்றை இணையவழி மூலம் திருத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், உயர்தர மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.