60 வயதான பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீடிப்பு?


60 வயதைப் பூர்த்தி செய்து, நன்நடத்தை கொண்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலும் ஒரு வருட சேவை நீடிப்பை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 10,000 உறுப்பினர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6,000 பேர் ஏற்கனவே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களத்தில் மனிதவள பற்றாக்குறை நிலவுவதை ஏற்றுக்கொண்ட அவர், அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், குறிப்பாக கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளின் பணிச்சுமையைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.