உதயநிதி ஸ்டாலின் கைது: 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் குறித்து அவதூறாகவும் இரட்டை அர்த்தத்துடனும் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவிரி உரிமை, விவசாயக் கடன் தள்ளுபடி, மேகதாது அணை விவகாரம் மற்றும் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று (03) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, த.வெ.க. மகளிரணி அளித்த புகாரின் அடிப்படையில், அவருக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், தஞ்சையிலிருந்து வந்த சிறப்புக் காவல் குழுவினர், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று விசாரணை நடத்தி உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர்.
இந்தச் செய்தி வெளியாகியதும், அவரது இல்லம் முன்பு திரண்ட தி.மு.க. தொண்டர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், உதயநிதி மேலதிக விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையில், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக த.வெ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவரது பேச்சைக் கண்டித்து ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் த.வெ.க. மகளிரணி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
