எரிபொருள் QR முறை நீக்கப்படாது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!


எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை இந்த நேரத்தில் நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விலைகளில் இன்னும் முழுமையான ஸ்திரத்தன்மை ஏற்படாததால், QR நடைமுறையை தொடர்ந்தும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

QR நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை மட்டுமன்றி, நாட்டின் டொலர் செலவீனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மத்திய கிழக்கில் மீண்டும் போர் நிலைமை தீவிரமடைந்தால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகாமல் இருக்க QR நடைமுறையை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, தற்போதைய சர்வதேச பதற்றநிலை காரணமாக இதுவரை நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.