ஓய்வுபெறும் வயதில் மாற்றம்? அனைத்து அரச பணியாளர்களுக்கும் 65 வயது வரை சேவை வாய்ப்பு!


அனைத்து அரச பணியாளர்களினதும் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கான திட்டமொன்றை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சட்டத்தின் படி, பொதுவான அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், சில விசேட தொழில்களில் ஓய்வுபெறும் வயது அதற்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 61 வயதும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கு 63 வயதும், உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு 65 வயதும், விசேட மருத்துவ நிபுணர்களுக்கு 63 வயதும் ஓய்வுபெறும் வயதாக உள்ளது.

மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து 67 ஆக உயர்த்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முயற்சியைத் தொடர்ந்து, பல தொழில்முறை சங்கங்கள் தங்களது உறுப்பினர்களின் ஓய்வுபெறும் வயதையும் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தக் கோரிக்கைகள் மற்றும் சில பொதுநிறுவனங்கள், சபைகளின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் தொழிலாளர் நம்பிக்கை நிதி (ETF) கொடுப்பனவுகளை மேலும் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கும் வாய்ப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, அனைத்து அரச பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, அரசாங்கத்தின் பொதுநிதி நிலையை வலுப்படுத்துவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் உதவும் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.