சவர்க்காரப் பொதிகளில் புதிய கட்டாய விதிமுறைகள் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!


சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக புதிய கட்டாய பொதியிடல் மற்றும் லேபிள் விதிமுறைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவு, 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1)(அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

இதன்படி, உற்பத்தியின் பெயர் தடித்த எழுத்துக்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது குறைந்தது இரண்டு மொழிகளில் பிரதான பொதிப் பகுதியில் (Main Panel) இடம்பெற வேண்டும். மீதமுள்ள மொழி, பொதியின் வேறு பகுதியில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும், பொதியிடப்படும் சவர்க்காரங்களில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் (Total Fatty Matter – TFM) சதவீதம், குறைந்தது 2 மில்லிமீற்றர் உயரமுள்ள தடித்த எழுத்துக்களில் தெளிவாக அச்சிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குவிதிகள் குழந்தை சவர்க்காரம், உடல் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல்வேறு வகை சவர்க்காரங்களுக்கு பொருந்தும்.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமார அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த புதிய ஏற்பாடுகள் 2027ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.