வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!


வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, நாட்டில் புகையற்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டம் வெற்றிலைப்பாக்கு விற்பனையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக அல்ல; மாறாக, வாய் புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,750 முதல் 1,900 வரை புதிய வாய் புற்றுநோய் நோயாளிகள் பதிவாகும் நிலையில், அந்த எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் குறித்த சட்டத்தை மீண்டும் தீவிரமாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்காலத்தில் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலாசார காரணங்களால் இதுவரை விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தாலும், பொதுமக்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இனி எந்தத் தளர்வும் இன்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.