அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அமைச்சர் விளக்கம்!


ஓய்வுபெறும் வயதை மாற்றுமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ளதாகவும், அவை தொடர்பில் அரசாங்கம் தற்போது பரிசீலனை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (12) மீரிகம வைத்தியசாலையில் சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கான புதிய சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறையினரிடமிருந்தும், சுகாதாரத் துறையில் பணியாற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்களிடமிருந்தும் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல், சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் இதேபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், சில தொழில் வல்லுநர்கள் தங்களால் இன்னும் சில ஆண்டுகள் திறம்பட பணியாற்ற முடியும் என்பதால், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்த யோசனைக்கு சில தரப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்றாலும், அரசாங்கம் அனைத்து கோரிக்கைகளையும் ஆராய்ந்து உரிய முடிவை எடுக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.