இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பௌத்த மக்களால் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் எசல பௌர்ணமி தினம் இன்று!
இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பௌத்த மக்களால் பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் எசல பௌர்ணமி தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகிறது.
பௌத்த வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற புனித நாளாக எசல பௌர்ணமி கருதப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூரும் நாளாகவும் இது சிறப்பிக்கப்படுகிறது.
பௌத்த நம்பிக்கையின்படி, ராணி மகா மாயா தேவியின் கருவில் இளவரசர் சித்தார்த்தர் கருவுற்றதும், இளவரசர் ராகுலன் பிறந்ததும், இளவரசர் சித்தார்த்தர் இல்லற வாழ்க்கையைத் துறந்து ஞானத்தைத் தேடி புறப்பட்டதும் எசல பௌர்ணமி தினத்திலேயே இடம்பெற்றதாகக் கருதப்படுகிறது.
அதேபோல், புத்தரின் முதல் தர்ம போதனையான தம்மச்சக்கப்பவத்தன சூத்திரம் சார்நாத்தில் ஐந்து சீடர்களுக்கு போதிக்கப்பட்டதும் இந்த புனித தினத்துடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வாகும்.
இலங்கையில், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவும் இந்த பௌர்ணமியுடன் தொடர்புடையதாகும்.
இந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விகாரைகளில் விசேட பூஜைகள், தர்ம போதனைகள் மற்றும் சமய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சமாதானம், கருணை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் புனித நாளாக எசல பௌர்ணமி பௌத்தர்களால் போற்றப்படுகிறது.
