2026 உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 3 வரை மட்டுமே அவகாசம்!


2026 கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிபர்கள் தங்களது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பிரிவில் பொறுப்பான பிரதி அல்லது உதவிக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களது முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் தேவைப்படும் பாடசாலை விண்ணப்பதாரர்களுக்காக, அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி மூலம் அனுமதி அட்டைகளில் தேவையான திருத்தங்களைச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி அட்டை திருத்தங்களை மேற்கொள்ளும் இறுதி காலக்கெடு ஓகஸ்ட் 3ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கெடு எந்தக் காரணத்திற்காகவும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 011 2784208, 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011 2784422 (தொலைநகல்) மற்றும் gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்புகொள்ளலாம்.