முதல்வர் விஜய்க்கு மிரட்டல் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது!
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
அவர் தனது உரையில்,
“மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சரே, உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?
சட்டமன்றத்தை பூட்டிப் பார். சட்டமன்றத்தை பூட்டும்போது உனக்கு எலும்பு இருக்காது. உடைத்துவிட்டுத்தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை பூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேரவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்? நாங்கள் ஒன்றும் பயந்து ஓடவில்லை.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேய் அடித்தது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். கொத்து பரோட்டா போடப் போறாராம். உன்னைப் போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். 150 கோடி ரூபாய் கறுப்புப் பணம் வாங்கியிருக்கிறார்கள்.
வழக்கு போடுவேன், மிரட்டுவேன், எம்.எல்.ஏவிடம் விலை பேசுவேன் என்கிறான். மானங்கெட்ட பையன், தகுதி இல்லாதவன் தான் இவன் கட்சியில் இருக்கிறான். எங்கள் தலைவர்களை அவமரியாதை செய்தால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம்” என பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இன்று (20) காலை மார்க்கண்டேயனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
மார்க்கண்டேயனின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டின் முன்பு திரண்ட திமுகவினர் காவல்துறை வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனிடையே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்ததுடன், விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையை பயன்படுத்தி திமுகவினரை அடக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
