பல்கலைக்கழகங்களுக்கு டெங்கு தடுப்பு வழிகாட்டல் இன்று அறிமுகம் – 88% பேருக்கு DENV-2 வைரஸ் பாதிப்பு!


இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு நோயைக் கண்காணித்தல், தடுப்பது மற்றும் நோயாளிகளை முறையாக முகாமைத்துவப்படுத்துவதற்கான தரப்படுத்தப்பட்ட மருத்துவ வழிகாட்டல் தொகுப்பு இன்று (20) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், நோயாளிகளை சரியான முறையில் கையாளுதல், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு நுளம்பு பரவலைத் தடுப்பதற்கான நடைமுறைகளை ஒருங்கிணைப்பதே இந்த வழிகாட்டலின் நோக்கமாகும். அண்மையில் டெங்கு பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இதனிடையே, இந்த ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 88 சதவீதம் பேர் டெங்கு-2 (DENV-2) வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், இதுவரை நாட்டில் 75,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 53 டெங்கு மரணங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், டெங்கு-2 (DENV-2) வைரஸ் திரிபுக்கு எதிரான மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், பொதுமக்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.