11 ஆம் தர தமிழ் மொழிப் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் விசாரணை!


மத்திய மாகாண பாடசாலைகளின் 11 ஆம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழிப் பரீட்சை வினாத்தாள், 2019 ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளின் மறுபதிப்பா என்பது தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

11 ஆம் தர மாணவர்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை நேற்று (14) நடைபெற்றபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ் மொழி வினாத்தாளில், 24 ஆம் வினா முதல் இறுதி வரை உள்ள கேள்விகளும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வினாத்தாள்களில் இடம்பெற்ற அனைத்து கேள்விகளும், 2019 ஆம் ஆண்டு வடமாகாண மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்றவையே என இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ள அவர், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வினாத்தாள் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு மாகாண பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாராச்சி, 2019 ஆம் ஆண்டு வடமாகாண வினாத்தாளுடன் தற்போது வழங்கப்பட்ட வினாத்தாளை ஒப்பிட்டு ஆய்வு செய்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.