பதப்படுத்தப்பட்ட திரவப் பாலில் அப்ளடோக்சின் அளவுக்கு புதிய கட்டுப்பாடு!
நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், உணவுப் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்தும் வகையிலும், பதப்படுத்தப்பட்ட திரவப் பாலில் காணப்படும் அப்ளடோக்சின் (Aflatoxin) நச்சுத்தன்மையின் அதிகபட்ச அளவை நிர்ணயிக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உத்தரவு இலக்கம் 98 மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில், நாட்டில் விநியோகிக்கப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் அனைத்து பதப்படுத்தப்பட்ட திரவப் பால்களும் இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தின் SLS 1815 தரநிலைகளுக்கு கட்டாயம் இணங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் திரவப் பாலில் அப்ளடோக்சின் நச்சுத்தன்மையின் அளவு 0.5 மைக்ரோகிராமை விட அதிகமாக இருக்கக் கூடாது என வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறும் அப்ளடோக்சின் கொண்ட திரவப் பாலை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், பொதியிடல், சேமித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு விதிமுறை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதற்கு முன்னதாக, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது உற்பத்தி மற்றும் விநியோக செயல்பாடுகளை புதிய தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
