நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஆட்சேர்ப்பு முறை!
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
கணிதம் உள்ளிட்ட கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடங்களுக்கு தேவையான தகுதியான ஆசிரியர்களை புதிய ஆட்சேர்ப்பு முறையின் மூலம் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், 2021ஆம் ஆண்டிற்குப் பின்னர் முறையான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை என்றும், இந்த ஆண்டுக்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கான நிதி ஒதுக்கீடும் தேவையான அனுமதிகளும் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும், கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 பேர் தோற்றியிருந்த நிலையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, அதிபர் சேவையுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கும் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தங்களது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அமைச்சுக்கு நேரடியாக வழங்கப்படும் அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
