புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்ட சிக்கல்களை விரைவில் தீர்க்க ஜனாதிபதி உத்தரவு!


வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு முந்தைய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

நாட்டுக்கு முக்கியமான வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் துறையாக விளங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, முறையான ஓய்வூதியத் திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

அதேவேளை, சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களின் நிதி இருப்புக்கு நேரடியாக வழங்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகச் செயல்படுவதற்கு பதிலாக, ஒருங்கிணைந்த பொதுத் திட்டத்தின் கீழ் செயற்படுவதன் மூலம் நேரத்தையும் வளங்களையும் சேமிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.