ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், நாட்டில் தற்போது 40,000க்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், ஆனால் 23,000 ஆசிரியர்களை மாத்திரமே சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிக்கு முன்னர் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதன்போது, ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களை குறிப்பிட்ட பதவிகளுக்கு இணைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள விதியை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர், அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற இரு தரப்பினருக்கும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கப் போவதில்லை என்றும், அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆசிரியர் நியமனங்கள் தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
