இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து தீவக மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம்!


இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து, தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுகள் மூலம் கடலுக்குச் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இலங்கை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தீவக மீனவர்கள் வலியுறுத்தினர்.