முதல்வர் விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - கர்நாடக அரசுக்கு போடப்பட்ட உத்தரவு!


தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் தற்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் என தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, கர்நாடக அரசு தரப்பில், “இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கே நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட முடியாது” என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

“இதனை ஜூலை 29-ம் திகதி காலை 8 மணி முதல் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கு நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.

எனினும், அவசர ஆலோசனையின் பின்னர், மழை பெய்யாததால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த சூழலில் தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது எனவும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.