அஸ்வெசும பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி; நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளர்களை குறிவைத்து நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அஸ்வெசும பயனாளர்களை பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளும் மோசடியாளர்கள், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர்.
பயனாளர்களின் தகவல்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, குறிப்பிட்ட தொகைப் பணத்தை செலுத்துமாறு அவர்கள் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், இவ்வாறான செயல்கள் சபையின் அனுமதியோ அறிவோ இன்றி மேற்கொள்ளப்படும் முற்றிலும் சட்டவிரோதமான மோசடிகள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், சம்பந்தப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ புகார் அளிக்குமாறும் பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அஸ்வெசும திட்டத்தின் கள அதிகாரிகளும் கிராம மட்டங்களில் இவ்வாறான மோசடிகள் குறித்து விழிப்புடன் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விபரங்கள், கடவுச்சொற்கள் அல்லது பணத்தை அறியாத நபர்களுக்கு தொலைபேசி வழியாக வழங்க வேண்டாம் என்றும் நலன்புரி நன்மைகள் சபை வலியுறுத்தியுள்ளது.
