கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பரபரப்பு: அடாவடி செய்த அர்ச்சுனா எம்.பி பொலிஸாரால் வெளியேற்றம்!


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரின் தலையீட்டில் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று (16.07.2026) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திருவையாறு பகுதியில் தென்னை செய்கை விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் குறித்த விடயத்தில் உடந்தையாக செயற்படுவதாக அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சுமத்தியதுடன், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் கூட்டத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பியும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் சந்திரசேகர் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு கோரியதை அடுத்து, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நிலைமை மேலும் பதற்றமடைந்தது.

இதையடுத்து பொலிஸார் தலையிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பநிலையைத் தொடர்ந்து பல அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.