எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி தொடர்ச்சியாக வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக, உலகச் சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகக்கூடும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உருவாகக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அரசாங்கம் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலைமை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் எந்தவித தடையுமின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது டீசல் நுகர்வு 11 சதவீதமும், பெற்றோல் நுகர்வு 9 சதவீதமும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றநிலையை கருத்தில் கொண்டு, எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்பவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். உலகளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, நாட்டிற்கு தடையற்ற மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், உலகச் சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.