செம்மணி புதைகுழி உள்ளிட்ட காணாமல்போனோர் விவகாரங்களில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் – நீதி அமைச்சர்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதியாக செயற்படுகின்றார் என்றும் அவர் தெரிவித்தார்.
வரலாற்றில் முதன்முறையாக வடக்கு மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் காணாமல்போனோரின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இன்னும் வேதனையுடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த துயரத்திற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தில் போதிய மனிதவள வசதிகள் இல்லாத நிலை காணப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து புதிய ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு 60 பேர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக தேவையான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தற்போது தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், நிலுவையில் உள்ள 11,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
