போர்ச் சூழலால் மூடப்பட்ட வான்பரப்பு; நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் விமானங்கள்!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு பயணிகள் விமானங்கள் இலக்கை அடைய முடியாமல் வானில் காத்திருந்த நிலையில், பின்னர் பாதுகாப்பாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
இதனை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது தகவலின்படி, குறித்த இரண்டு விமானங்களும் இன்று (15) காலை எந்தவித பாதிப்புமின்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
நேற்று (14) மாலை 5.10 மணிக்கு யூ.எல்.-229 விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும், இரவு 6.36 மணிக்கு யூ.எல்.-253 விமானம் சவுதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கியும் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டிருந்தன.
ஏ320 நியோ ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு விமானங்களும் மத்திய கிழக்கு வலயத்தை அண்மித்தபோது, ஈரானிலிருந்து இடம்பெற்ற ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக குவைத் மற்றும் சவுதி அரேபியா தற்காலிகமாக தங்களது வான்பரப்புகளை மூடியிருந்தன.
இதனால் குறித்த விமானங்களால் திட்டமிட்டபடி இலக்கை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திரும்புவதற்குத் தேவையான எரிபொருள் போதுமானதாக இல்லாததால், பாதுகாப்பான வான்பரப்பில் சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வட்டமிட்டு பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின் வான்பரப்புகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானிகள் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கை மேற்கொண்டு, இரண்டு விமானங்களையும் வெற்றிகரமாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு திருப்பி அழைத்து வந்தனர்.
இதேபோன்ற போர்ச் சூழல் காரணமாக, அந்தப் பகுதியில் பயணித்த பல சர்வதேச விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் காத்திருந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
