ரயில்வே துறையில் இயந்திர பற்றாக்குறை – சேவைகளை தடையின்றி வழங்க உடனடி நடவடிக்கை கோரும் நிலைய அதிபர்கள் சங்கம்!


ரயில்வே திணைக்களத்தின் கீழ் உள்ள ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தற்போதைய ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் 106 ஆக காணப்பட்ட ரயில் இயந்திரங்களின் எண்ணிக்கை தற்போது 98 ஆக குறைந்துள்ளதாகவும், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2023ஆம் ஆண்டு சுமார் 450 ரயில் சேவைகளை முன்னெடுக்க 74 இயந்திரங்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது இயக்கத்திற்கு உகந்த நிலையில் உள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை 49 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும், தற்போதைய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2023ஆம் ஆண்டில் 261 ஆக காணப்பட்ட ரயில் இயந்திரங்கள் மற்றும் வலு தொகுதிகளின் மொத்த இருப்பு, 2026ஆம் ஆண்டில் 242 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரயில் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.