10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம் : பிரிவெனா மாணவர்கள் கைது!


எப்பாவல பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் கண்ணாடியை உடைத்து, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணத்தைத் திருடிய சம்பவம்
தொடர்பில் இரு பிரிவெனா மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி அதிகாலை எப்பாவெல நகர பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள குறித்த விற்பனை நிலையத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 14 வயதுடைய மாணவர்கள் எனவும், அவர்கள் எப்பாவெல, எந்தகல பகுதியில் உள்ள பிரிவெனா ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காட்சிகள், மோப்ப நாய் மற்றும் விரல் அடையாளப் பிரிவின் உதவியுடன் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளின் அடையாள இலக்கங்கள் மற்றும் சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 6 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5,000 ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

விசாரணைகளில், குறித்த மாணவர்களில் ஒருவர் முன்னதாக அந்தக் கடைக்குச் சென்று நவீன கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளை கேட்டறிந்துள்ளதுடன், பின்னர் தனக்கு தொலைபேசி ஒன்றை வாங்கித் தருமாறு தந்தையிடம் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், தனது நண்பனுடன் இணைந்து தொலைபேசிகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

திருடப்பட்ட சில தொலைபேசிகளை தங்களது பாவனைக்காக வைத்துக்கொண்ட அவர்கள், ஏனைய தொலைபேசிகளை பிரிவெனாவில் உள்ள தேரர் ஒருவருக்கும், தந்தைக்கும் மற்றும் சில மாணவர்களுக்கும் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் திருடப்பட்ட தொலைபேசிகளில் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட சிம் அட்டை மூலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணையவழி விளையாட்டில் ஈடுபட்டு வந்த இவர்கள், அதற்கு அடிமையானதன் காரணமாகவே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும், மீட்கப்பட்ட பொருட்களுடன் இன்று (18) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

எப்பாவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.