ரூ.10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கொக்கேய்ன் பறிமுதல் – அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் கைது!
ரூ.10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கோலாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரம் வழியாக, கட்டார் நாட்டின் தோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விமான நிலைய முனையத்தை நோக்கி சக்கர நாற்காலியின் உதவியுடன் சென்றுகொண்டிருந்த போது, அவரது நடத்தை தொடர்பில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் தன்னிடம் இருந்த கொக்கேய்ன் அடங்கிய 14 மாத்திரைகளை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும், சில போதைப்பொருள் மாத்திரைகளை தான் விழுங்கியுள்ளதாகவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
Tags:
இலங்கை செய்தி
.jpg)