புகைப்பிடித்தலால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பு – பொருளாதாரத்துக்கும் கடும் பாதிப்பு!


இலங்கையில் புகைப்பிடித்தல் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் உயிரிழப்பதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்கொள்வதாகவும் பேராசிரியர் எல்.எல். அமில இசுரு தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற விசேட நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட அவர், சுகாதார அமைச்சின் தரவுகளின்படி புகைப்பிடித்தல் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 20,000 இளம் உயிர்கள் பறிபோவதாக குறிப்பிட்டார்.

புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக சுகாதாரப் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் சுமார் 214 பில்லியன் ரூபாயை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புகையிலை மூலம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் வரி வருமானத்தை விட, புகைப்பிடித்தலால் ஏற்படும் பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்காக மூன்று மடங்கு அதிக நிதி மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புகைப்பிடிப்பவர்கள் தங்களுக்கு மட்டுமன்றி, தங்களைச் சுற்றியுள்ள புகையில்லா மக்களுக்கும், குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் இணைந்து, 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதை முற்றாகத் தடை செய்யும் வகையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், புகைப்பிடித்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலகிற்கே இலங்கை ஒரு முன்மாதிரியான நாடாக அமையும் என பேராசிரியர் எல்.எல். அமில இசுரு மேலும் தெரிவித்தார்.