நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பாக 4,672 வழக்குகள்!


2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில், நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான வகையில் சுற்றுச்சூழலை பராமரித்தமை தொடர்பாக நாடு முழுவதும் 4,672 வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்களை வைத்திருப்போர் அல்லது நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தங்களது வளாகங்களை அசுத்தமாக பராமரிப்போர் மீது தண்டனைச் சட்டக் கோவையின் 262 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2007 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் சட்டத்தின் பிரகாரம், நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்படும் வளாகங்களுக்கு சுகாதார அதிகாரிகள் 'சிவப்பு எச்சரிக்கை' அறிவிப்பை வழங்கும் சட்டபூர்வ அதிகாரம் கொண்டுள்ளனர்.

அந்த சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பின்பற்றத் தவறினால், குறித்த சட்டத்தின் 6 ஆவது பிரிவின் கீழ் அதிகபட்சமாக 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.