இந்தியா–இலங்கை வீட்டுவசதி திட்டம்: மேலும் 48 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!


இந்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மேலும் 48 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் உள்ள நந்த காமா மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஜன அருண காமா ஆகிய இரண்டு புதிய மாதிரி கிராமங்கள் கடந்த புதன்கிழமை (29) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து தலைமை வகித்தனர்.

மேலும், கேகாலையில் நடைபெற்ற நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி கலந்து கொண்டதுடன், களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றார்.

இந்த வீடுகள் கையளிப்பு நிகழ்வுகளில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வீட்டுவசதி அமைச்சின் அதிகாரிகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா–இலங்கை இடையே 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாதிரி கிராம வீட்டுவசதி திட்டம், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் குறைந்த வருமானம் கொண்ட 600 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாதிரி கிராமத்திலும் மாவட்ட வீட்டுவசதிக் குழுக்களால் தெரிவு செய்யப்பட்ட 24 வீட்டு அலகுகள் அமைக்கப்படுகின்றன.

இதுவரை மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம் தற்போது சுமார் 98.5 சதவீத முன்னேற்றத்தை எட்டியுள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து மாதிரி கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.