மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை – மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய வானிலை அறிக்கையைத் தொடர்ந்து, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்பிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சிறிய ரக படகுகள் மற்றும் பாரம்பரிய படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள படகுகள் இருப்பின், அவை உடனடியாக பாதுகாப்பாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்களும் பாதுகாப்பு அங்கிகளை (Life Jackets) கட்டாயமாக அணிய வேண்டும் எனவும், கடலுக்குச் செல்வதற்கு முன்னர் படகுகளின் இயந்திரம், எரிபொருள் இருப்பு உள்ளிட்டவற்றை முழுமையாக பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பான படகுகளை மட்டுமே கடலுக்கு அனுப்புவதை உறுதி செய்யுமாறு படகு உரிமையாளர்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான ஏனைய கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் கடல் நிலைமைகளை அவதானித்து, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே கடலுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் வெளியிடும் உத்தியோகபூர்வ வானிலை மற்றும் கடல் பாதுகாப்பு அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

