நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!


நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை ஒரு வருடத்தால் அதிகரிக்கும் தீர்மானம் எந்தவொரு தனிநபரையும் இலக்காகக் கொண்டது அல்ல என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேங்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான வழக்குகளை விரைவாக விசாரணை செய்து, மக்களுக்கு துரிதமான நீதியை வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் வெளியிட்டு வரும் கருத்துக்களே நீதித்துறைக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இருதரப்பு விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்பட்ட பின்னரே வழங்கப்பட்டதாக கூறினார்.

எனினும், குறித்த தீர்ப்புக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து வெளியிடுவது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக்கொண்டு சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீதிபதிகள் மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், சுயாதீனமாக செயற்படும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குகளை மாவட்ட மட்டத்திலேயே விசாரணை செய்யும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், உயர் நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாகவே, நீதவான் நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை சேவையாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வழக்குத் தேக்கங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வழக்குகள் துரிதமாக நிறைவடைவதையே சட்டத்தரணிகள் சமூகமும் விரும்புவதால், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு அவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.