12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் போகம்பர சிறைச்சாலை – அரசின் விசேட அறிவிப்பு!


நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் கைதிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பழைய போகம்பர சிறைச்சாலை மீண்டும் அதிகாரப்பூர்வ சிறைச்சாலையாக அரசாங்கத்தால் நிறுவப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு 2026 ஜூலை 8ஆம் தேதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைச் சட்டத்தின் (அத்தியாயம் 54) பிரிவு 2 இன் கீழ், அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார கையொப்பமிட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம், பழைய போகம்பர சிறைச்சாலை இலங்கை முழுவதையும் உள்ளடக்கும் அதிகார வரம்புடன் உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கடும் நெரிசல் நிலவி வரும் நிலையில், அந்தச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பர சிறைச்சாலை 138 ஆண்டுகள் செயல்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பின்னர் அங்கு இருந்த கைதிகள் பல்லேகலையில் அமைந்துள்ள தும்பற சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர். தற்போது, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, போகம்பர சிறைச்சாலை மீண்டும் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.