அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் நீக்கம்!
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் இன்றைய தினம் (30) முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களே இவ்வாறு நீக்கப்படுவதாகவும், அவர்கள் ‘விளிம்புநிலை குழுவினர்’ என வகைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பரிலேயே இக்குடும்பங்களை பட்டியலில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மேலும் ஆறு மாதங்கள் அஸ்வெசும திட்டத்தில் தொடர அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் குடும்பங்களுக்கு மாதாந்தம் சுமார் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்துள்ளது.
மேலும், அஸ்வெசும பட்டியலில் இருந்த ‘இடைநிலை’ பிரிவைச் சேர்ந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அஸ்வெசும திட்டத்தில் ‘அதி வறிய’ மற்றும் ‘வறிய’ பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 13 இலட்சம் குடும்பங்கள் மாத்திரமே உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, அதி வறிய பிரிவில் 9 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களும், வறிய பிரிவில் 4 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களும் உள்ளனர். இவர்களுக்கு முறையே 17,500 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது.
