நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்கள்!


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் பெயர் பட்டியல், சிறைச்சாலைக்கு வெளியே வீதியோரத்தில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் ஒன்றிலும் மேலும் சில இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சிறைச்சாலைக்கு முன்பாக பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும், கைதிகளின் உறவினர்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ள சிறைச்சாலைகள் தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (09) காலை முதல் பலர் அங்கு வந்து பெயர் பட்டியலைப் பார்வையிட்டு, தங்களது உறவினர்களின் விவரங்களைத் தேடி வருகின்றனர்.

“எங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் தற்போது எந்த சிறைச்சாலையில் உள்ளனர்?” என்ற கவலையுடன் பல குடும்பத்தினர் இன்னும் தகவல்களைத் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் மற்றும் பதற்ற நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.