நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: விசேட விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு!


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் அரச பாதுகாப்பில் இருந்த கைதிகள் காயமடைந்ததுடன், கடமையில் ஈடுபட்டிருந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன என்பன தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.

இதற்காக ஆணைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் விசாரணைப் பிரிவு, மறுஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவுகளைச் சேர்ந்த சட்ட அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகள் அடங்கிய பல விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, நேற்று நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற ஆணைக்குழுவின் குழுவினர், அங்கு சிகிச்சை பெற்று வரும் கைதிகள் மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தகவல்களைப் பெற்றுள்ளனர்.

மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்ற புகார்கள் கிடைத்துள்ளதால், அங்குணகொளபெலஸ்ஸ மற்றும் கண்டி போகம்பறை சிறைச்சாலைகளுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேரில் சென்று, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்து, அமைதியை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னரே, சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஆய்வுகளின் போது கடுமையான இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதிக் குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக ஆணையாளர் தெரிவித்தார்.

கைதிகள் படுத்து உறங்குவதற்குக் கூட போதிய இடவசதி இல்லாத சூழலில், குறைந்த வளங்களுடனேயே சிறைச்சாலை அதிகாரிகள் நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.